10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பவன் செராவத் படைத்துள்ளார்.
10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று திங்கள்கிழமை மும்பையில் தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த 2 நாள் ஏலத்தில் முதல் நாள் ஏ மற்றும் பி பிரிவுகளிலும், அடுத்த நாள் சி மற்றும் டி பிரிவுகளிலும் உள்ள வீரர்களை 12 அணிகளும் முந்தியடித்துக் கொண்டு வாங்கி வருகின்றன.
இந்த ஏலத்தில் மொத்தமாக 595 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்களுக்கான அடிப்படை விலைகள் ஏ பிரிவுக்கு ரூ.30 லட்சமாகவும், பி பிரிவுக்கு ரூ.20 லட்சமாகவும், சி வகைக்கு ரூ.13 லட்சமாகவும், டி பிரிவில் அடிப்படை விலை ரூ.9 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி.கே.எல் தொடருக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பவன் செராவத் படைத்துள்ளார். மிகவும் பரபரப்பாக நடந்த ஏலத்தில் அவரை தெலுங்கு டைட்டன்ஸ் அணி 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
கடந்த சீசனில் பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ரூ 2.26 கோடிக்கு வாங்கியது. தொடக்கப்போட்டியில் வெறும் 10 நிமிடங்கள் மட்டும் விளையாடி காயம் காரணமாக தொடரிலிருந்தே வெளியேறினார். அதனால், நட்சத்திர வீரரான பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ஏலத்திற்கு முன்னதாக கழற்றி விட்டது. இருப்பினும், ஏலத்தில் போது அவரை வாங்க முயற்சிப்போம் என்று கூறியிருந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஏலத்தின் போது பவன் செராவத்தை வாங்க ஹரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் உள்ளிட்ட பல அணிகளும் ஏலத்தில் போட்டி போட்டன. இறுதியில் அவரை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வசப்படுத்தியது.
பவன் செராவத் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டியில் ஈரானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி இருந்தார். அவரது தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இதேபோல், ஆசிய கபடி சாம்பியன்ஸ் போட்டியிலும் இந்தியா கோப்பை வென்றது. அவர் 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பவன் செராவத்-க்குப் பிறகு 2வது அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஈரானின் முகமதுரேசா ஷட்லூயி சியானே உள்ளார். அவரை ஏ பிரிவில் புனேரி பல்டானால் ரூ.2.35 கோடிக்கு வாங்கயது. 3வது வீரராக இந்தியாவின் மனிந்தர் சிங் உள்ளார். அவரை பெங்கால் வாரியர்ஸால் ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
பி.கே.எல் தொடர் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டிஃபெண்டர் என்கிற சாதனையை ஈரானின் நட்சத்திர டிஃபெண்டரான ஃபசல் அட்ராச்சலி படைத்துள்ளார். அவரை ரூ.1.60 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
ரோஹித் குலியா, விஜய் மாலிக், மன்ஜீத், ஆஷு மாலிக் மற்றும் பலர் போன்ற குறிப்பிடத்தக்க வீரர்கள் பல்வேறு அணிகளை ஈர்த்தனர். இருப்பினும் சந்தீப் நர்வால், தீபக் நிவாஸ் ஹூடா, ஆஷிஷ், மனோஜ் கவுடா, சச்சின் நர்வால், குர்தீப், அஜிங்க்யா கப்ரே, மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகிய வீரர்கள் ஏலம் போகவில்லை.