புதுடெல்லி: “ருதுராஜ்தான் கேப்டன் என்பதில் தோனி தெளிவாக இருந்தார். ஆம், கேப்டன்சியிலிருந்து தோனி விலகிய போது அதற்கு சரியான நபர் ருதுராஜ்தான் என்பது எங்களுக்குத் தெரிந்தது. தோனி அவருக்கு உதவி புரிய முயற்சிக்கிறார்.” என்று முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மைக் ஹஸ்ஸி இது தொடர்பாக மேலும் பேசுகையில் “உங்கள் யோசனையும் எனது யோசனையும் ஒன்றுதான். தோனி தன் மனதிற்குள் வைத்திருப்பார். வெளியில் சொல்ல மாட்டார். எனினும் தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார் என்றே நாங்கள் நம்புகிறோம்.
ஏனென்றால் அவர் இப்போதும் நன்றாக பேட்டிங் செய்கிறார். பயிற்சிக்கு முன்கூட்டியே வந்து நிறைய பந்துகள் ஆடுகிறார். சீசன் முழுவதுமே அவர் நல்ல டச்சில் இருக்கிறார். கடந்த சீசனுக்குப் பிறகு தோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
என்னுடைய கணிப்பின் படி தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்றே கருதுகிறேன். இருப்பினும் அவர் முடிவு என்னவென்பதை பார்க்க பொறுத்திருக்க வேண்டும். எனினும் தோனி உடனடியாக ஓய்வு முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை.
தோனி இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறங்கி ஆட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்தான் தோனி கடைசியில் இறங்குகிறார். ஆனால் முதல் பந்திலிருந்தே கிளீன் ஹிட் செய்பவர்கள் தோனியை அன்றி யாருமில்லை. உண்மையில் தோனி மகத்தான வீரர்.
ருதுராஜ்தான் கேப்டன் என்பதில் தோனி தெளிவாக இருந்தார். ஆம், கேப்டன்சியிலிருந்து தோனி விலகிய போது அதற்கு சரியான நபர் ருதுராஜ்தான் என்பது எங்களுக்குத் தெரிந்தது. தோனி அவருக்கு உதவி புரிய முயற்சிக்கிறார். ஆனால் ஸ்டீபன் பிளெமிங் தான் ருதுராஜின் ரோல் மாடல்.” என்று கூறினார்.