துரத்திய பாலின சர்ச்சை: துணிச்சலோடு போராடி தங்கம் வென்ற இமானே கெலிஃப்!


பாரிஸ்: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில், பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரியாவைச் சேர்ந்த 25 வயதான இமானே கேலிஃப் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இமானே கெலிஃப் மற்றும் உலக சாம்பியன் பட்டத்தை இருமுறை பெற்ற லின்னும் கடந்த 2023 ஆம் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இந்த சர்ச்சை எழுந்தது. மேலும் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினியை வெறும் 46 நொடிகளில் இமானே கெலிஃப் வீழ்த்தியதால் அவரது பாலினம் குறித்த சர்ச்சை பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் முந்தைய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் குத்துச்சண்டை போட்டி தகுதியாக பாலின சோதனை செய்யப்படாத நிலையில், இந்த முறையும் பாலின சோதனை மேற்கொள்ளப்படவில்லை. டெஸ்டோடிரான் ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாலேயே ஒருவரை பெண் அல்ல என்று கூறிவிட முடியாது என்று இமானே மீதான குற்றச்சாட்டுகள் புறந்தள்ளப்பட்டன. எனவே இமானே கெலிஃப் சிக்கலின்றி விளையாடினார்.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் 66 கிலோ பிரிவில், அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கேலிஃப் சீன வீராங்கனை யாங் லியூவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார்.

வெற்றிக்கு பின்னர் கெலிஃப் அளித்த பேட்டியில், “எல்லாப் பெண்களைப் போல நானும் ஒரு பெண். நான் பெண்ணாகப் பிறந்தேன். பெண்ணாகவே வாழ்கிறேன். ஆனால் வெற்றியைப் பொறுக்க முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்களால் எனது வெற்றியைப் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த தங்கப் பதக்கம் தான் எனக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட தீவிர பிரச்சாரங்களுக்கான பதில்.

இது எனது கனவு. 8 ஆண்டுகளாக இந்தக் கனவு என்னிடமிருந்தது. இப்போது நான் ஒலிம்பிக் சாம்பியன். தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 8 ஆண்டுகளாக உழைத்தேன். தூக்கமில்லாமல் உழைத்தேன். இருந்தாலும் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

x