128 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு... ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு; ரசிகர்கள் உற்சாகம்!


வருகின்ற 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெற இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. உலக அளவில் கிரிக்கெட் பல கோப்பைகள் கொண்ட போட்டிகள், தொடர்கள் என்று நடத்தப்பட்டாலும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. தற்போது அதுவும் நிறைவேற போகிறது.

வருகின்ற 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி, ஃப்ளாக் கால்பந்து, பேஸ்பாலும் சேர்க்கப்பட இருக்கிறது. கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. இத்தகைய சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த பரிந்துரை தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

’’லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நூறாண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய விளையாட்டு மதிப்பீடு சார்ந்த செயல்முறையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழலில் மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்கு பிறகு எடுக்கப்படும் இறுதி முடிவை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்” என ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே (Greg Barclay) தெரிவித்துள்ளார்.

x