ஹெர்னியா பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதால், சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். 360 டிகிரி வீரர் என புகழப்படும் இவரது சிக்ஸர்களால், எதிரணி பந்து வீச்சாளர்களை திணறடிப்பார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அவர் 8 முதல் 9 வாரங்கள் வரை ஓய்வில் இருக்கும் நிலை ஏற்படும். இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கடினம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது சூர்யகுமார் யாதவும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளதால், இது அந்த அணியை கடுமையாக பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனை சமாளித்து அந்த அணி இம்முறை எதிரணிக்கு டஃப் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் காயம் காரணமாக இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஜனவரி 25ம் தேதி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்குள் அவர் அணிக்கு திரும்புவது கடினம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி பும்ராவை நம்பியே டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...