ஐசிசி நடத்தும் போட்டிகளில், இந்திய அணி மேலும் பல சாதனைகள் படைத்திருக்கலாம் என்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் பேச்சு சிரிப்பை வரவழைப்பதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது. இதில் ஒரு நாள் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை சமன் செய்திருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். இந்திய அணி பல சாதனைகளை படைத்திருக்க வேண்டும் எனவும், ஆனால் அவர்கள் சாதனைகள் குறைவாக படைத்திருக்கின்றனர் எனவும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் இந்திய அணி குறைவான சாதனைகளை படைத்துள்ளது எனவும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் மைக்கேல் வாகனின் இந்த கருத்து சிரிப்பை வரவழைப்பதாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசும்போது, ”ஐசிசி நடத்தும் போட்டிகளில், நாங்கள் சில ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை. ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம் தான். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் அணிகளில் இந்திய அணியே சிறந்த அணி. வெளிநாடுகளில் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளோம். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான வெற்றிகளை பெற்றுள்ளோம்.” என்றார்
மேலும், “மைக்கேல் வாகனின் கருத்து குறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் சிரிப்பை வரவழைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியில் இருந்து, இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு வரும் திறன் கொண்ட அணி என்பது வெளிப்பட்டுள்ளது. இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகளில் நாங்கள் தோல்வியை தழுவினோம். அதை நான் முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பாருங்கள். கிரிக்கெட் இன்னும் விளையாட்டாகவே இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.