இந்தியாவுக்கு 4வது பதக்கம் - பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது ஆடவர் ஹாக்கி அணி!


பாரிஸ்: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் போராடி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினை இந்திய அணி எதிர்கொண்டது. முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரு தரப்புக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு முதல் பாதியின் 2 நிமிடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர்கள் கோலாக மாற்றத் தவறினர்.


18-வது நிமிடத்தில் தனது கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரல்லஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இரண்டாவது கால் பகுதி முடியும்போது, 30-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீதீ சிங் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமனநிலையில் இருந்தன.

33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் மற்றொரு கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை முன்னிலை பெற வைத்தார். இதையடுத்து 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இப்போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த நிலையில், மீண்டும் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்த்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி.

x