தமிழக வீரர் சாய் கிஷோரின் அற்புதமான பந்துவீச்சு மற்றும் ருதுராஜ், திலக் ஆகியோரின் அதிரடி பேட்டிங் காரணமாக வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இதில் கிரிக்கெட் பிரிவில் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் வங்கதேச அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி 96 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி வீரர் சாய் கிஷோர் 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோல் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் அதன் பின்னர் கூட்டணி அமைத்த ருதுராஜ் மற்றும் திலக், அட்டகாசமாக ரன்களை சேகரிக்க துவங்கினர். இதனால் வெறும் 9.2 ஓவர் முடிவில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி 97 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 42 ரன்களுடன் ருதுராஜும், திலக் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதால் மேலும் ஒரு பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகி உள்ளது. தற்போது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி இறுதிப் போட்டியை வெல்லும் என ரசிகர்கள் உற்சாகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.