ஆசியக் கோப்பை தொடரின் ஹாக்கி கால் இறுதிச் சுற்றில் தென் கொரியாவை 5க்கு 3 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் ஹாக்கி போட்டிகள் கால் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் முதல் போட்டியாக இந்திய அணி, தென் கொரிய அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணியின் ஹர்திக் சிங் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து இந்த தொடரில் 11 கோல்களை அடித்துள்ள மந்தீப் சிங் 12-வது கோலை அடித்து இந்திய அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி கொடுத்தார். இதையடுத்து இரு அணி வீரர்களும் முதல் பாதியிலேயே அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டதால் 4-2 என்ற கணக்கில் முதல் பாதி முடிவடைந்தது.
இரண்டாம் பாதியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டும் அடித்தன. இதனால் 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை சீனாவும், ஜப்பானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணியோடு இந்திய அணி இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒரு பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்துள்ளது. இறுதிப் போட்டியில் வென்றால் இது இந்திய அணியின் 4வது ஆசிய கோப்பை தங்கப்பதக்கமாக அமையும் என்பதோடு, பாரீசில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இந்திய அணி தகுதி பெறும் என்பதால், இந்த போட்டியை வெல்வதற்கு இந்திய அணி வீரர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!