1 மணி நேரத்தில் 2 கிலோ எடை குறைத்து தங்கம் வென்றேன்: மேரி கோமின் மலரும் நினைவு


புதுடெல்லி: ஒரு மணி நேரத்தில் 2 கிலோ எடையைக் குறைத்து இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன் என்று இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் கூறியுள்ளார்.

இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது உடல் எடையை பராமரிக்க தவறியதால் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தேவைக்கு அதிகமாக 100 கிராம் எடை கொண்டதால் அவர் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஆறு முறை உலக சாம்பியனும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமும் தனது எடைப் பிரச்சினையால் தகுதி நீக்கம் செய்யும் அச்சுறுத்தலை எதிர்கொண்டார். அது தொடர்பாக தற்போது அவர் தனது மலரும் நினைவுகளை நினைவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேரி கோம் கூறுகையில், " கடந்த 2018-ம் ஆண்டு போலந்தின் க்ளிவிஸில் நடைபெற்ற பெண்கள் 13 வது சிலேசியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியின் போது எனக்கு எடை பிரச்சினை இருந்தது. நான் போட்டியிட்ட பிரிவில் 48 கிலோ எடை இருந்தது. நான் அதை விட இரண்டு கிலோகிராம் அதிகமாக இருந்தேன். அதனால் நான் ஒரு தேவையற்ற பயத்தை எதிர்கொண்டேன். ஆனால், தொடர்ந்து ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்ததால் உடல் எடையைக் குறைக்க முடிந்தது” என்று அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் மேரி கோம். ஒரு மணி நேரத்தில் 2 கிலோ எடையை குறைத்த கோம், இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

x