ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி: மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது


விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவருடனான ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கின் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதிய இந்தியாவின் வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

பின்னர், இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத்.இந்த ஆட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது. முன்னதாக, காலை 9 மணி அளவில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. இந்த நிலையில், ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இந்தியா வீராங்கனை மற்றும் அவரது குழுவினரும் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் கலந்து கொண்டார் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் 10-0 என்ற கணக்கில் அவர் படுதோல்வியடைந்தார். இந்த நிலையில், போட்டி நடைபெறும் இடத்திற்கு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில், அனுமதியை மீறி ஆண்டிம் பங்கலின் தங்கை நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஆண்டிம் பங்கலின் சகோதரியை பாரிஸ் போலீஸார் கைது செய்தனர். இதன் பின்னர் அவரை எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. இதனால், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையறிந்த மத்திய அரசு, பங்கல், அவரது பயிற்சியாளர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x