சென்னை: 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி 2 -0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்தியாவுடன் இலங்கை அணி மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிசங்கா, ஃபெர்னாண்டோ ஆகியோர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனையடுத்து நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல தொடக்க ஆட்டக்காரரான ஃபெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த குஷல் மெண்டிஸ் 59 ரன்களும், கேப்டன் அசலங்கா 10 ரன்களும் எடுத்தனர். அதன்பின்னர் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்களும், சிராஜ், அக்ஷர் படேல், சுந்தர், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
249 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ரோகித் ஷர்மா, சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 6 ரன்களிலும், விராட் கோலி 20 ரன்களிலும், அக்ஷர் படேல் 2 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி இலங்கையின் சுழலில் சிக்கி 12.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அடுத்து வந்த ரியான் பராக் 15 ரன்களிலும், சிவம் துபே 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மட்டும் கொஞ்சம் தாக்குப்பிடித்து 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 30 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 26.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் துனித் வெள்ளாலகே 5 விக்கெட்டுகளையும், வாண்டர்சே மற்றும் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெள்ளாலகே தொடர் நாயகனாகவும், ஃபெர்னாண்டோ ஆட்டநாயகனாகவும் தேர்வானார்கள்.
இந்தியா - இலங்கை இடையிலான முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் இலங்கை முன்னிலையில் இருந்தது. 3வது போட்டியிலும் இலங்கை அணி இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம், 27 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.