நெகிழ்ச்சி... தடகளத்துக்கு வெளியேயும் தடைகள், சோதனைகள்... அனைத்தையும் தாண்டி பதக்கம் வென்ற ப்ரீத்தி லம்பா!


ப்ரீத்தி லம்பா

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களில், பெரும்பாலானோர் பின்னே பெரும் சவாலான பயணம் இருக்கும். ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கும் ப்ரீத்தி லம்பாவும் அதில் சேர்வார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10-ம் நாளான நேற்று தடகளம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 7 பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்றனர். அவர்களில் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெண்கலம் வென்ற ப்ரீத்தி லம்பா, அதை அடைவதற்காக கடந்து வந்த போராட்டப் பாதைக்காக அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறார்.

சீனாவின் ஷாங்சோ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகளிருக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டியில் ப்ரீத்தி லம்பா வெண்கலம் வென்றிருக்கிறார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஜாவா கிராமம் ப்ரீத்தி லம்பாவின் இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக ப்ரீத்தியின் எளிய இல்லத்தில் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்திருக்கின்றனர். மகள் ப்ரீத்தி லம்பா வெற்றிக்கு அவரது தந்தை ஜக்பீர் லம்பா ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். ஃபரிதாபாத் பெட்ரோல் பங்க் ஒன்றில் சாதாரண தொழிலாளியாக பணிபுரியும் அவரின் மாத ஊதியம் ரூ10 ஆயிரம் மட்டுமே. ஓய்வு பெறும் வயதிலும் குடும்பத்துக்காக, குறிப்பாக மகளின் விளையாட்டுக் கனவுகளை ஈடேற்றுவதற்காக அவர் பணிக்கு செல்கிறார்.

ப்ரீத்தி லம்பா

தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மட்டுமன்றி தனிப்பட்ட வகையில் ப்ரீத்தி லம்பாவும் தற்போதைய வெற்றிக்காக போராட்டங்களையும், தியாகங்களையும் கடந்து வந்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் "எனது வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறேன். 2017-ல் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிலிருந்து தேறி 2019-ல் பதக்கங்களை வெல்லத் தொடங்கியபோது, 2020-ல் கொரானோ என்னை முடக்கிப்போட்டது.

அதன் பாதிப்புகளில் இருந்து முழுதாய் விடுபட ஓராண்டு ஆனது. அதற்குள் பயிற்சியின்போது காயம் நேர மீண்டும் முடங்கிப்போனேன். ஆசிய போட்டியில் பங்கேற்க முடியாது போனால் விளையாட்டுக்கே முழுக்குபோடத் தயாராக இருந்தேன். எனது தந்தையின் பிரார்த்தனை ஜெயித்திருக்கிறது. வாழ்க்கையில் முழுதுமாய் சோர்ந்து போயிருந்த அவர், என்னுடைய வெற்றியால் தனது ஆயுள் சற்று நீண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்” என்றார் மகிழ்ச்சியோடு.

ப்ரீத்தி லம்பா வென்றது வெண்கலமாக இருக்கலாம். அவர் கடந்து வந்த போராட்டப் பாதையுடன் ஒப்பிடுகையில், அது தங்கம் வென்றதை விட உயர்வானதாக மிளிர்கிறது.

x