ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம்: பதக்க கனவு பறிபோனது


மகளிர் மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று மாலை இறுதிப்போட்டியில் விளையாட இருந்த நிலையில் திடீரென 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியளித்தது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். வினேஷ் தகுதி நீக்கத்தால், மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே வழங்கப்படும். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த அணி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் அணியின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை எடை பார்க்கும் ப்பொது 50 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருந்தார். இந்த நேரத்தில் குழுவினரால் மேற்கொண்டு எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. மேலும் கையில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

x