பாரிஸ்: ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலே 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைப்பெறும் ஈட்டி எறிதல் போட்டியில் மொத்தம் 32 பேர் பங்கேற்றனர். இதில் பி பிரிவில் இடம்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன் மூலம் அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த சீசனின் மிகச் சிறந்த தூரம் இது என குறிப்பிடப்படுகிறது.
இதே போன்று பாகிஸ்தான் வீரர் அர்ஸ்த் நதீம் தன்னுடைய முதல் முயற்சியில் 86.59 மீட்டர் தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இந்த பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரரான கிஷோர் சேனா 80.21 மீட்டர் தூரம் வீசி தொடரிலிருந்து வெளியேறினார்.
ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. நீரஜ் சோப்ரா: 2020-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.