பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்றார். இதன் மூலம் பாட்மிண்டன் விளையாட்டில் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஆடவர் என்று சரித்திர சாதனையை அவர் படைத்துள்ளார்.
காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் தியெனை 19-21, 21-15, 21-12 என்ற கணக்கில் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல் செட்டை அவர் இழந்திருந்தார். இருந்தும் அடுத்த இரண்டு சுற்றுகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார்.
22 வயதான லக்ஷயா சென்னுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட அவர் நெருங்கிவிட்டார். அரையிறுதியில் சிங்கப்பூரின் கீன் யூ அல்லது டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளார்.
ஒலிம்பிக் பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் மட்டும் தான் காலிறுதியை கடந்துள்ளனர். ஒலிம்பிக் பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதி ஆட்டத்தில் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.