சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியை சந்தித்த பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது அடுத்தகட்ட பயணம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவிடம், இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து சிந்து வெளியேறியுள்ளார்
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹா பிங் ஜியாவை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பி.வி.சிந்து நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், ‘ அழகான பயணம் ஆனால் கடினமான தோல்வி இந்தத் தோல்வி எனது பாட்மிண்டன் வாழ்க்கையில் மிகப் பெரியது. இதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு சிறிது காலம் தேவைப்படும். ஆனால் வாழ்க்கையில் இதையெல்லாம் கடந்து முன்னேறி செல்ல வேண்டும்.
2 ஆண்டுகள் காயம், நீண்ட நாள்கள் போட்டிகளில் விளையாடாமல் தள்ளியே இருந்ததால் பாரிஸ் ஒலிம்பிக் எனக்கு ஒரு போர்க்களம் போலிருந்தது. சவால்கள் நிறைந்திருந்தாலும் எனது அழகான நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 3ஆவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது எனக்கு மிகுந்த பெருமையாகவும் இருந்தது. நான் போட்டியிட்டது அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளித்ததையும் நினைத்து நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நானும் எனது அணியும் ஒட்டுமொத்த உழைப்பையும் பாரீஸ் ஒலிம்பிக்கில் கொடுத்தோம். அதில் எந்தவித வருத்தமும் இல்லை.
தற்போது, எனது வருங்காலம் குறித்து தெளிவுபடுத்துகிறேன்: நான் தொடர்ந்து விளையாடுவேன், ஆனால் ஒரு சிறிய ஓய்வுக்கு பிறகு. எனது உடலுக்கும் குறிப்பாக எனது மனதுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. இருப்பினும் நான் போட்டிகள் குறித்து சரியாக திட்டமிட வேண்டும். நான் அதிகம் விரும்பும் பாட்மிண்டனை ரசித்து விளையாட விரும்புகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.