பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: ஜப்பான் முதலிடம், சீனா 2வது இடம், 33வது இடத்தில் இந்தியா


பாரிஸ்: ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 7 தங்கத்துடன் ஜப்பான் முதலிடத்திலும், 6 தங்கத்துடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. இதில், 5வது நாளான இன்று பதக்கப் பட்டியலில் ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அந்நாடு மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சுடுதல் மற்றும் டைவிங்கில் 6 தங்கத்துடன் பதக்கப் பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாடு மற்ற போட்டிகளில் 6 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 6 தங்கம் உட்பட மொத்தம் 11 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் பிரான்ஸ் 5 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் என 18 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.

பதக்கப் பட்டியலில் 2 வெண்கலத்துடன் இந்தியா 33வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் வெண்கலம் வென்று தந்த மானு பாக்கர், பின்னர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கம் வென்று தந்தது குறிப்பிடத்தக்கது.

x