பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் இந்தியா இன்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியா வீராங்கனை என்ற பெருமையை மனு பாகர் பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் பங்கேற்றார். இந்த போட்டியில் 221.7 புள்ளிகள் குவித்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை அவர் கைப்பற்றினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக் குழு பிரிவில் மனு பாகர் மற்றும் சரப்ஜோத் சிங் இன்று நடந்த போட்டியில் இந்தியாவிற்கான இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்தனர். இந்த ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரிய ஜோடியை வீழ்த்தி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சரித்திர சாதனையை மனு பாகர் படைத்துள்ளார்.