ஓடியே 5 ரன்கள் எடுத்த அயர்லாந்து வீரர்கள்: ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அபூர்வ சாதனை!


ஸ்டார்மாண்ட்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர்கள் ஒரே பந்தில் 5 ரன்கள் ஓடி எடுத்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜிம்பாப்வே அணி, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. கடந்த ஜூலை 25ம் தேதி இந்த போட்டி அயர்லாந்தின் ஸ்டார்மாண்ட் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், பிரின்ஸ் மெஸ்வோர் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஜிம்பாப்வே அணி 210 ரன்கள் குவித்து இருந்தது. அயர்லாந்து தரப்பில் ஆன்டி மெக்பிரைன், பெர்ரி மெகார்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய அயர்லாந்து அணியில் பீட்டர் மூர் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்திருந்தது. ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங், சிவங்கா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

40 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இதில் தீரன் மாயர்ஸ் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 197 ரன்கள் எடுத்திருந்தது. அயர்லாந்து தரப்பில் ஆன்டி மெக்பிரைன் 4 விக்கெட்டுக்களையும், மார்க் அடெய்ர், கிரெய்க் யங் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் லோர்கன் டுச்செர் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆன்டி மெக்பிரைன் 55 ரன்களுடனும், மார்க் அடெய்ர் 24 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 6 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து, வெற்றி இலக்கான 158 ரன்கள் எட்டி அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர் என்கிரவா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆன்டி மெக்பிரைன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே இந்த ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸின் 17வது ஓவரை, ரிச்சர்ட் என்கிரவா வீசினார். 2வது பந்தில் ஆன்டி மெக்பிரைன் இந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அந்த பந்தை பீல்டர் பவுண்டரி லைனுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினார். இருப்பினும் அந்த பந்தை மீண்டும் எடுத்து பீல்டரிடம் வழங்க வேறு வீரர்கள் இல்லாததால், ஆன்டியும், லோர்கனும் ஓடியே 5 ரன்கள் எடுத்தனர்.

வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளில் கீப்பரின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள ஹெல்மெட் மீது பந்து பட்டு பவுண்டரி லைனுக்கு சென்றால் 5 ரன்கள் வழங்கப்படும். அதேபோல் ஒவர்துரோவின் போதும் வீரர்கள் 5 ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓவர் த்ரோ எதுவும் இல்லாமல், வீரர்கள் ஓடியே 5 ரன்கள் சேர்த்துள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

x