கருணாநிதி நூற்றாண்டு விழா தென்னிந்திய கபடி போட்டி: தஞ்சை பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி முதலிடம்


மதுரையில் இன்று நடந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் அரையிறுதிப்போட்டியை வீரர்களுக்கு கை குலுக்கி தொடங்கி வைத்தார் தயாநிதிமாறன் எம்பி. அருகில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அர.சக்கரபாணி உள்ளனர். படம்: ஆர்.அசோக்

மதுரை: மதுரையில் இன்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த தென்னந்திய அளவிலான போட்டியில் தஞ்சை பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினர் முதலிடம் பெற்று ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, கோப்பை வென்றனர்.

மதுரை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த 16 அணியினர் பங்கேற்றனர். இதனை மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து இன்று நடந்த அரையிறுதிப் போட்டியை தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் 16 அணிகள் விளையாடியதில் அரை இறுதி போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வாகினர். முதல் அணியாக சென்னை இன்கம்டேக்ஸ் அணி மற்றும் கேரளா ஜேகே அகாடமி அணியினர் விளையாடியதில் இன்கம்டேக்ஸ் அணியினர் வென்றனர்.

2 வது அணியாக தஞ்சை பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினர், தமிழ்நாடு போலீஸ் அணி விளையாடியதில், பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினர் வென்றனர். அதனைத்தொடர்ந்து இறுதிப் போட்டியில் தஞ்சை பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியும், சென்னை இன்கம்டேக்ஸ் அணியினர் விளையாடியதில் இன்கம் டேக்ஸ் அணி 23 புள்ளிகள், தஞ்சை பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி 33 புள்ளிகள் பெற்றது.

இதில் முதல் பரிசான ரூ.1 லட்சம் மற்றும் கோப்பையை 33 புள்ளிகள் பெற்ற தஞ்சை பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி பெற்றது. இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரத்தை சென்னை இன்கம்டாக்ஸ் அணி பெற்றது. மூன்றாமிடம் பெற்ற தமிழ்நாடு காவல்துறை அணி ரூ.50 ஆயிரம் பரிசு பெற்றது. கேரளா ஜேகே அகாடமி அணி ரூ. 50 ஆயிரம் பரிசு பெற்றது. இதற்கான பரிசுத்தொகையை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

இதில், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, திமுக மாநில தணிக்கை உறுப்பினர் வேலுசாமி, தீர்மான குழுச் செயலாளர் அக்ரி. கணேசன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

x