ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டையை துவங்கிய சீனா - 10 மீ துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்தல்


பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டியில் தங்கம் வென்று சீனா தனது பதக்க எண்ணிக்கையை துவங்கி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகள் பங்கேற்றன. இதில் சீனாவின் ஹுயாங்க் யுடிங் - செங் லிஹாவ் இணை, தென்கொரியாவின் கிம் ஜிஹ்ஹியான், பார்க் ஹாஜூன் ஜோடியை 16க்கு 12 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை பெற்று பதக்க எண்ணிக்கையை சீனா துவங்கியுள்ளது. இரண்டாம் இடம் பிடித்த தென் கொரியா அணி வெள்ளிப் பதக்கத்தையும், கஜகஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமீதா - பபுதா அர்ஜுன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இதனிடையே பாய்மர படகுப் போட்டியில் இந்தியாவுக்கு நாளை மற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பாய்மரப்படகு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் பன்வர் 4வது இடத்தை பிடித்து, காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு இழந்தார். இருப்பினும் இந்த சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்த வீரர்களுக்கு நாளை நடைபெறும் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால், காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் 4வது நபராக பல்ராஜ் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கும்.

x