ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை


தம்புள்ள: ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள், ஐக்கிய அரபு நாடுகள், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய 8 பெண்கள் அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் விளையாடும் மற்றொரு அணி எது என்பதை தீர்மானிப்பதற்கான அரை இறுதி போட்டி நேற்று ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முனீபா அலி 37 ரன்களும், குல் ஃபெரோசா 25 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை தரப்பில் உதேஷிகா பிரபோதனி, கவிஷா தில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் சமாரி அட்டப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில், 9 பௌண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 63 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 141 ரன்களை எட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் சடியா இக்பால் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் இலங்கை அணி மோதவுள்ளது.

x