பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போலோ வீரர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் ஒலிம்பிக் 2024 போட்டி இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 117 பேர் பங்கேற்கின்றனர், அதில் 47 பெண் போட்டியாளர்களும் உள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுக்கு கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு போலோ வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கண்ட பின்னர் அவர்கள் இரண்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2020-ம் ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் காரணமாக 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டது. மேலும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் முன் மீண்டும் கரோனா அச்சம் தலைதூக்கியுள்ளது.
ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் இருந்த மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின்படி, போலோ வீரர்கள் இருவர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் இருந்த மற்ற ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. இதனால் மீதமுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரான்ஸில், கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசும், உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளன. இருப்பினும், பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஃபிரடெரிக் வாலெடோக்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.