ஐபிஎல் 2025 - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குட்பை சொல்லப்போகும் சூர்யகுமார் யாதவ்?!


மும்பை: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 9 சீசன்களில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 8 கோடி ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். ஆனால், இஷான் கிஷான் உள்ளிட்ட மற்ற வீரர்கள் ரூ.10 முதல் 15 கோடி பெறுகின்றனர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சீசனில் சூர்யகுமாரை மும்பை அணி ஓரங்கட்டியதும் இதற்கு ஒரு காரணம். அதாவது ரோகித் சர்மாவுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி தனக்கு கிடைக்கும் என சூர்யகுமார் நினைத்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, மீண்டும் அணிக்கு அழைத்து வரப்பட்டு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.

உரிமையாளரின் இந்த முடிவால் சூர்யகுமார் அதிருப்தி அடைந்துள்ளார். இதன் காரணமாக இம்முறை அவர் அணியில் தக்கவைக்கப்பட போவதில்லை என மும்பை இந்தியன்ஸ் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் புதிய கேப்டன்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே மெகா ஏலத்தில் சூர்யகுமார் யாதவ் தோன்றினால் புதிய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது சூர்யகுமார் யாதவ் புதிய அணிக்கு கேப்டனாக பெரும் ஏலத் தொகையுடன் காத்திருக்கிறார். ஆனால், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பே சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி புதிய அணியில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

x