ஹர்திக்கிற்கு பதிலாக சூர்யகுமார் எப்படி கேப்டன் ஆனார்? - அகர்கர் விளக்கம்


மும்பை: டி20 இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக, சூர்யகுமார் யாதவ் எப்படி ஆனார் என்பது குறித்து அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு, பல கேள்விகள் எழுப்பப்பட்டன. மிக முக்கியமாக, டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்து ஏன் என்பது தான் அதில் முக்கியமான கேள்வி. டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் ஷர்மா அறிவிக்கும் முன்பே ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதனால் ரோகித் ஷர்மாவுக்கு பிறகு டி20 அணியின் நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் வேறு திட்டத்தில் இருந்த பிசிசிஐ, சூர்யகுமார் யாதவை தற்போது டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளது.

இந்த சூழலில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். இதில் அவருடன் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரும் கலந்து கொண்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில், எதிர்பார்த்தது போலவே, அணி தேர்வு, சில வீரர்களின் புறக்கணிப்பு, ஃபார்மில் இல்லாத வீரர்கள் தேர்வு குறித்து செய்தியாளர்கள் பலர் கேள்விகளை எழுப்பினர்.

இத்தனைக்கும் மத்தியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஏன் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்ற கேள்விதான் பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய அம்சமாக இருந்தது. இந்த கேள்விக்கு அஜித் அகர்கர், " தலைமைக்கு சூர்யா சிறந்த தேர்வு . அவர் சிறந்த டி20 வீரரும் கூட, டிரஸ்ஸிங் ரூமில் நல்ல சூழலை உருவாக்கி இருக்கிறார். மேலும் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் கேப்டன் தேவை.

ஹர்திக் எப்போதும் எங்களுக்கு ஒரு முக்கிய வீரர். ஆனால் உடற்தகுதி அவருக்கு சவாலாக உள்ளது. நமக்கு அதிக நேரம் விளையாடக்கூடிய அணியின் கேப்டன் தேவை. இவற்றையெல்லாம் வைத்துதான் சூர்யா கேப்டனாகியுள்ளார்" என்று பதிலளித்தார்.

x