புதுச்சேரி: புதுச்சேரியில் விளையாட்டுத்துறை முடங்கியுள்ள நிலையில் சர்வதேச தரத்தில் பயிற்சி தர மத்திய அரசு அளித்த முன்பணம் ரூ.1 கோடி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனித்துறை பல ஆண்டுகளாக இல்லாத சூழல் நிலவியது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விளையாட்டு ஒரு பிரிவாக இருந்தது. புதுச்சேரி விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளி ஆகியவை தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கல்வித்துறைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நமச்சிவாயம், விளையாட்டுகளை மேம்படுத்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறையை உருவாக்குவதாக அறிவித்தார். அதன்படி இளைஞர் மற்றும் விளையாட்டு இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதிய அமைப்பாக உருவானது. ஆணையத்தின் தலைவராக முதல்வரும், துணைத் தலைவராக அமைச்சரும் உள்ளனர்.
ஆனால், விளையாட்டு இயக்குனரகம், விளையாட்டு ஆணையத்துக்கு உள்கட்டமைப்போ, பணியாளர்களோ புதிதாக நியமிக்கவில்லை. அதனால் விளையாட்டுத்துறை முடங்கியுள்ளது. இயக்குநராக இருந்த செந்தில்குமார் விடுவிக்கப்பட்ட பிறகு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினியே கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். மத்திய அரசு நிதியை திருப்பி தந்த விளையாட்டுத்துறை அண்மையில் விளையாட்டு மேம்பாட்டுக்காக மத்திய அரசு தந்த நிதியை அவர்களுக்கு திருப்பிய அனுப்பிய சம்பவமும் நடந்துள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "மத்திய அரசு சர்வதேச தரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ‘கேலோ இந்தியா ஸ்டேட் சென்டர் ஆப் எக்சலன்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட புதுவையில் திறமை மிக்க 20 ஆண், 20 பெண் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தடகளம், பேட்மிட்டன், பளு தூக்கும் போட்டிக்கு சர்வதேச பயிற்சி அளிக்க திட்டமிட்டப்பட்டது. இதற்கு தேவையான பயிற்சி தளம், பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் லேப் உட்பட நவீன வசதிகள் செய்யவும் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.10 கோடி வரை மத்திய அரசு செலவிடும்.
இந்தத் திட்டத்தை தொடங்க 2021-ல் மத்திய அரசு ரூ.1 கோடி முன்பணமாக வழங்கியது. புதுவை மாநில அரசின் உப்பளம் மைதான ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளி திட்டத்தை செயல்படுத்தாமல் 2 ஆண்டாக பணத்தை அப்படியே வைத்திருந்தது. இந்தநிலையில் மத்திய அரசு விளையாட்டு ஆணையத்துக்கு ரூ.1 கோடியை திருப்பி அனுப்பியுள்ளது." என்றனர். இது புதுச்சேரி விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.