வெற்றிக் கோப்பையுடன் விடைபெறுவாரா மெஸ்ஸி?


லியோனல் மெஸ்ஸி

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ள சூழலில், ஓய்வுக்கு தயாராகும் மெஸ்ஸி வெற்றிக் கோப்பையுடன் விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

35 வயதாகும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். தற்போது குரேஷியா அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தயாரானதன பிறகு, மற்றுமோர் முறை தனது விருப்பத்தை உறுதி செய்திருக்கிறார். இதனால் ஞாயிறு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிபோட்டியில் அனல் பறக்கும் என்று மெஸ்ஸியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

முன்னதாக, குரேஷியாவுடனான முதலாவது அரை இறுதிப்போட்டியில், முதல் கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றிக் கணக்கை மெஸ்ஸி தொடங்கி வைத்தார். ஜூலியன் 2 கோல்கள் போட்டதன் போட்டதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் குரேஷியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா. 2வது அரையிறுதிப் போட்டியில் மோதும் பிரான்ஸ் - மொராக்கோ அணிகளில் வெற்றி பெறும் அணியுடன், அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

உலகக்கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை எதிர்கொண்ட அர்ஜென்டினா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் சவுதி அரேபியா 2 - 1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்தது. அணியின் இதர வீரர்களைவிட மெஸ்ஸியும், அவரது சர்வதேச ரசிகர்களும் இந்த தோல்வியில் கலங்கிப்போயிருந்தனர். இந்த உலகக்கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னரே அறிவித்திருந்த மெஸ்ஸிக்கு, முதல் ஆட்டமே தோல்விமுகமானது பெரும் ஏமாற்றமானது.

ஆனால் அடுத்தடுத்த ஆட்டங்களில் மெஸ்ஸியும் சக வீரர்களும் தங்கள் திறமையை நிரூபித்ததில், இறுதிப்போட்டிக்கு தற்போது தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம் 6-வது முறையாக அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1986-இல் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா, அதன் பிறகான 1990 மற்றும் 2014 போட்டிகளில் முறையே இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகளை சந்திக்கும் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது.

பிரான்ஸ் - மொராக்கோ அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதி மோதல் இன்று(டிச.14) நடைபெறுகிறது. தொடர்ந்து இறுதிப்போட்டி ஞாயிறு(டிச.18) அன்று நடைபெற உள்ளது.

x