மும்பை: விவாகரத்து பெற்ற மனைவிக்கு சொத்தில் பங்கு கிடைக்காமல் தடுக்க ஹர்திக் பாண்டியா ஏற்கெனவே ஏற்பாடுகளை செய்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதற்குப் பிறகு, ஐபிஎல்லின் ஒவ்வொரு சீசனிலும் மைதானத்தில் தோன்றி ஹர்திக் பாண்டியாவிற்கு நடாஷா உற்சாகப்படுத்தினார். ஆனால் இந்த ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்டியா அறிமுகமானாலும், நடாஷா மட்டும் மைதானத்திற்கு வரவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் பிரிவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிச்சும் விவாகரத்து செய்வதை சமீபத்தில் உறுதி செய்துள்ளனர். மேலும் 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு குட்பை கூறுவதாக இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விவாகரத்து பெற்ற மனைவி நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா மூலம் எவ்வளவு ஜீவனாம்சம் கிடைக்கும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
ஹர்திக் பாண்டியா விவாகரத்து செய்தால், அவர் தனது சொத்தில் 70 சதவீதத்தை மனைவிக்கு வழங்க வேண்டும் என்று முன்னதாக செய்திகள் வெளியாகின. பாண்டியாவிடம் இருந்து நடாஷா பெரிய தொகையை இழப்பீடாக பெறமாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதற்கு பாண்டியாவின் பழைய பேச்சை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டில், கௌரவ் கபூரின் 'பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், பாண்டியா, "எனது சொத்துக்கள் அனைத்தையும் எனது தாயார் பெயரில் பதிவு செய்துள்ளேன். என் பெயரில் எதையும் எடுக்கமாட்டேன்" என்று தெளிவுபடுத்தியிருந்தார். அப்போது அவர் கூறுகையில்," கார் முதல் வீடுகள் வரை அனைத்தும் என் அம்மாவின் பெயரில்தான் உள்ளது. நான் யாரையும் நம்பவில்லை. அதனால் என் அம்மாவின் பெயரில் அனைத்தையும் பதிவு செய்துள்ளேன். ஏனென்றால் எதிர்காலத்தில் யாருக்கும் 50 சதவீதம் கொடுக்க விரும்பவில்லை" என்று ஹர்திக் பாண்டியா வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
அதாவது எதிர்காலத்தில் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தால் கூட, தனது சொத்தில் 50 சதவீதம் யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
தற்போது ஹர்திக் பாண்டியா, நடாஷா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்துள்ளார். ஆனால் இந்த விவாகரத்தில் பாண்டியாவின் சொத்தில் 50 சதவீத பங்கு செட்டில்மென்டாக கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், ஹர்திக் பாண்டியா சொன்னது போல் அனைத்து சொத்தையும் அம்மாவின் பெயரில் தான் வாங்கியுள்ளார்.