ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியை தழுவியதால் பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஷாக் கிராலி 122 ரன்னும், பென் டக்கெட் 197 ரன்னும், ஹோலி போப் 198 ரன்னும், ஹாரி புரூக் 153 ரன்னும் விளாசி சதம் அடித்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்னும் அடித்தார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து விளையாடி ரன்களை குவித்தனர். அந்த அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அப்துல்லா ஷபீக் 114 ரன்னும், இமாம் உல் ஹக் 121 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் &36 ரன்னும், சல்மான் 53 ரன்னும் விளாசி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தனர்.
இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. நேற்று 4ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 343 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை பாகிஸ்தான் இன்று விளையாடி. முதல் இன்னிங்சில் சதம் அடித்த அப்துல்லா ஷபீக் 6 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் இமாம் உல் ஹக் நன்றாக விளையாடி 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதேநேரத்தில் சவுத் ஷகீல் அபாரமாக விளையாடி வந்தார். இவர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர் 76 ரன்னில் ஆட்டமிழக்க, முகமது ரிஸ்வான் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார். அவரும் 46 ரன்னில் வெளியேறியதால் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. முடிவில் 268 ரன்னுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால், இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கொந்தளித்தனர். 2-வது டெஸ்ட் போட்டி முல்டானில் வரும் 9-ம் தேதியும், 3-வது டெஸ்ட் வரும் 17-ம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது.