கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் மத்தியில், ஜப்பான் ரசிகர்களின் வித்தியாசமான அணுகுமுறை உலக மக்களின் உள்ளங்களை கொள்ளையிட்டு வருகின்றன.
நவ.24 அன்று கலிபா சர்வதேச கால்பந்து மைதானத்தில் 4 முறை உலகக் கோப்பை வென்ற ஜெர்மனியுடன் ஜப்பான் மோதும் போட்டி களைகட்டியிருந்தது. ஐரோப்பிய ரசிகர்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஜப்பானிய ரசிகர்களும் அரங்கை நிறைத்திருந்தனர். பொறிபறக்கும் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜெர்மனி முதலில் கோல் அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தது. ஆனால் ஆட்டத்தின் முடிவில் 2 கோல் அடித்து ஜெர்மனியை வென்றது ஜப்பான். மைதானத்தில் தீரத்துடன் மோதி வென்ற ஜப்பானிய அணியைவிட, பார்வையாளர் அரங்கிலிருந்த ஜப்பான் ரசிகர்களின் பாங்கு உலக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டன.
ஜெர்மனியை வீழ்த்திய தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடிய ஜப்பான் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உடனே அரங்கை விட்டு அகலவில்லை. சக ரசிகர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், தட்டுகள், தின்பண்ட பாக்கெட்டுகள் இன்னும் விளையாட்டு பிரசுரங்கள், பத்திரிக்கைகள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாக சேகரிக்க ஆரம்பித்தனர். கைவசம் எடுத்துச் சென்ற பையில் அவற்றை நிரப்பிய பின்னரே வெளியேறினர். ஜப்பான் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஜப்பான் ரசிகர்கள் இவ்வாறு செய்ததாகவே, தொலைக்காட்சியில் அவற்றை கண்டவர்கள் மேம்போக்காக கருதினர். கத்தார் உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் தொடங்கியது முதலே, ஜப்பான் ரசிகர்கள் இப்படித்தான் அரங்கை 'காலி' செய்கிறார்கள்.
விளையாட்டு போட்டிகளின் நோக்கங்கள் மைதான மோதலுக்கு அப்பாலும் பரவலானவை. உடலோம்பல், ஆரோக்கியம், மனிதர்கள் - தேசங்கள் மத்தியிலான ஒற்றுமை, பூசல்களை போக்கி நேசம் பரப்புதல் என அவற்றில் பட்டியல் நீண்டது. அதில் ஒன்றாக தூய்மை பேணுவதன் அவசியத்தையும் சேர்த்திருக்கிறார்கள் ஜப்பான் ரசிகர்கள்.
இவை குறித்து ஜப்பான் ரசிகர்களிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு ‘நாங்கள் ஜப்பானியர்கள். புழங்கும் இடத்தை மதிப்பவர்கள். அதில் ஒன்றாக தூய்மை பேணுகிறவர்கள். எங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே இதனை பழக்கி இருக்கிறார்கள். மனத்தூய்மை என்பதும் நாம் புழங்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதும் வேறல்ல’ என்று மிகவும் சாதாரணமாக ஜப்பான் ரசிகர்கள் பதிலளித்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து ஜப்பான் சென்ற புத்த மதத்தின் பிரிவான ஷிண்டோ மார்க்கத்தை பின்பற்றும் ஜப்பானியர்கள், இவ்வாறு தூய்மை பேணுவதை தங்கள் மார்க்கம் மற்றும் வாழ்வியலின் அங்கமாக கொண்டிருக்கிறார்கள்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பார்வையாளர் அரங்குகளில் சாதாரண குப்பைகளோடு தேசங்களின் தேசியக் கொடிகளும் காலில் அரைபடும். அதுவரை தங்கள் தேசத்தையும், அணி வீரர்களையும் தேசியக் கொடி கொண்டு ஆதரித்து ஆர்ப்பரித்த ரசிகர்கள், ஆட்டம் முடிந்த கையோடு அப்படியே வீசிச் செல்வார்கள். ஜப்பானியர்கள் தந்த விழிப்புணர்வு காரணமாக ரசிகர்கள் முதல் கட்டமாக தங்கள் தேசியக் கொடியை வீசிச் செல்வது குறைந்திருக்கிறது. மேலும் குப்பைகளை போடுவதெற்கன அரங்கிலிருக்கும் தொட்டிகளை பயன்படுத்துவதும் கூடியிருக்கிறது.
கத்தார் உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொதுசுகாதாரம் பேணலில் முன்மாதிரியாக விளங்கிய வகையில் உலக மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது ஜப்பான்.