சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வாய்ப்பில்லை: டேவிட் வார்னர் ஏமாற்றம்


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னரை தேர்வு செய்யும் திட்டமில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார். இதனால் டேவிட் வார்னர் ஏமாற்றமடைந்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார். 37 வயதான ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். இருப்பினும், வரும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட விருப்பம் தெரிவித்தார்.

இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டால் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வருவேன் என்றும் வார்னர் கூறினார். எனவே, 2025 பிப்ரவரியில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் வார்னர் விளையாட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, இந்த போட்டியில் டேவிட் வார்னர் விளையாட வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," டேவிட் வார்னர் விரும்பினாலும், அவர் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார். டேவிட் வார்னர் மூன்று வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றார். அவரின் பங்களிப்பை நாம் பாராட்ட வேண்டும். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபிக்கு அவரை தேர்வு செய்யும் திட்டம் இல்லை" என்று பெய்லி கூறினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். மேலும், வார்னருக்குப் பதிலாக ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின்ன் இன்னிங்ஸை ஜேக் பிரேசர் தொடங்குவார் என்று கூறலாம்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸி அணிக்க்காக 161 போட்டிகளில் 159 இன்னிங்ஸ் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 6932 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 22 சதங்களும் 33 அரைசதங்களும் அடங்கும். மேலும், ஆஸ்திரேலியாவுக்காக 110 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 2300 பந்துகளை சந்தித்து 3277 ரன்கள் குவித்துள்ளார். இந்த நேரத்தில், அவர் ஒரு சிறந்த சதத்தையும் 28 அரைசதங்களையும் அடித்தார்.

மேலும் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 205 இன்னிங்ஸ்களில் 3 இரட்டை சதம், 26 சதம், 37 அரைசதங்கள் என மொத்தம் 8786 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று வடிவங்களிலும் 3 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

x