பெர்லின்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் முதல் நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் டெக்லான் ரைஸ் அடித்த பந்தை ஸ்பெயின் அணியின் லீ நார்மண்ட் விலக்கிவிட முயன்றார். ஆனால் பந்து பாக்ஸ் பகுதியின் ஓரத்தில் யாரும் மார்க் செய்யப்படாமல் நின்ற பில்போடனிடம் சென்றது. அவர், பந்தை கோல் வலைக்குள் தட்டி விட முயன்றார். ஆனால் ஸ்பெயின் கோல் கீப்பர் அற்புதமாக செயல்பட்டு கோல் விழவிடாமல் தடுத்தார். முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
47-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் லாமின் யாமல் பாக்ஸ் பகுதிக்குள் பந்தை கொண்டு சென்று நிக்கோ வில்லியம்ஸுக்கு அனுப்பினார். கோல் கம்பத்துக்கு அருகே யாரும் மார்க் செய்யப்படாமல் இருந்த நிக்கோ வில்லியம்ஸ் இடது புறத்தில் இருந்த அடித்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 56-வது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸ் அடித்தபந்து கோல்கம்பத்துக்கு நெருக்கமாக இடதுபுறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.
66-வது நிமிடத்தில் டேனி ஆல்மோ உதவியுடன் பந்தை பெற்ற லாமின் யாமல் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த ஷாட், கோல்கம்பத்தின் இடதுபுறம் தடுக்கப்பட்டது. 73-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் உதவியுடன் பந்தை பெற்ற பால்மர், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த ஷாட் கோல் வலையின் இடதுபுறத்தை துளைத்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.
82-வது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற லாமின் யாமல் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த ஷாட் இங்கிலாந்து கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 86-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்க் குகுரெல்லாவின் கிராஸை பெற்ற மைக்கேல் ஓயர்சபால் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல் அடித்து அசத்தினார். இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
89-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மர் கார்னரில் இருந்து அடித்த பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் நின்ற டெக்லான் ரைஸ் தலையால் முட்டி கோல்அடிக்க முயன்றார். இதை ஸ்பெயின் கோல்கீப்பர் உனான் சைமன் கைகளால் தட்டிவிட்டார். அவர், தட்டிவிட்ட பந்தை இங்கிலாந்து வீரர் மார்க் குஹி தலையால் முட்டி கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். அப்போது கோல் லைனில் நின்ற ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ தலையால் முட்டி பந்தை விலக்கி விட்டார்.
இதை மீண்டும் டெக்லான் ரைஸ் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கம்பத்தை விட்டு விலகிச் சென்றது. டேனி ஆல்மோ பந்தை விலக்கிவிடாமல் இருந்திருந்தால் அது கோலாக மாறியிருக்கும். முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி 1964, 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தது.
ஸ்பெயின் அணியின் வெற்றியால், 58 ஆண்டுகளுக்குப் பிறகுபெரிய அளவிலான தொடரில் பட்டம் வெல்லும் இங்கிலாந்து அணியின் கனவு கைகூடாமல் போனது.யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பை வெல்ல முடியாமல் சோகத்துடன் வெளியேறி உள்ளது. அந்த அணி 2021-ம் ஆண்டுதொடரின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியிடம் பொனல்டி ஷூட் அவுட்டில் தோல்வி கண்டிருந்தது.