உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை: போராடி தோற்றது நெதர்லாந்து


இன்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி உலக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை டி 20 தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி இன்று ஜீலாங்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிசாங்கா 14 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், குஷால் மெண்டிஸ் மறுபுறம் நிலைத்து அதிரடியாக ஆடினார். தனஞ்செய டி செல்வாவும் டக் அவுட்டாகிவிட, அடுத்து களமிறங்கிய அசலாங்கா பொறுப்பாக ஆடினார். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 44 பந்துகளில் 5 சிக்சர்கள் 5 பவுண்டரியுடன் 79 ரன்கள் விளாசினார். அசலாங்கா 31 ரன்கள் எடுத்தார்.

163 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஓ டவுடு தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினார். ஆனால் மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தன. அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் மட்டுமே 21 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை அணியின் தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணியின் வீரர் குஷால் மெண்டில் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

நெதர்லாந்தினை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை லீக் ‘ஏ’ பிரிவில் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நெதர்லாந்து அணியும் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் ரன்ரேட் -0.162 ஆக உள்ளது. நமீபியா அணி இரண்டு புள்ளிகளுடன், ரன் ரேட்டில் +1.277 ஆக உள்ளது. எனவே இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை நமீபியா வீழ்த்தினால் அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோல்வியுற்றால் நெதர்லாந்து சூப்பர் 12க்கு போகும்.

x