கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: 16-வது முறையாக அர்ஜெண்டினாவுக்கு கோப்பை


கோப்பையுடன் அர்ஜெண்டினா அணி வீரர்கள்

மியாமி கார்டர்ன்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கொலம்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா அணி.

இந்த ஆட்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி கார்டனில் உள்ள ஹார்டு ராக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ரசிகர்களின் கூட்ட நெரிசல், பாதுகாப்பு காரணமாக போட்டி ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜான் கோர்டோபா பாக்ஸின் மையப்பகுதியில் இருந்துஉதைத்த பந்து கோல்கம்பத்தின் இடதுபுறம் பட்டு விலகிச் சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் கார்லோஸ் குயஸ்டா பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் அது,அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.

20-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவின் கிராஸை பெற்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து உதைத்த பந்தை கொலம்பியா கோல் கீப்பர் தடுத்தார். 33-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜெபர்சன் லெர்மா 35 அடி தூரத்தில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்து, கோல்கம்பத்தின் இடதுபுறம் தடுக்கப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 48-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா இலக்கை நோக்கி அடித்த பந்தை கோல் கம்பத்தின் மையப்பகுதியில் பாய்ந்தபடி கொலம்பியா கோல்கீப்பர் தடுத்தார்.

58-வது நிமிடத்திலும் ஏஞ்சல் டி மரியாவின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 64-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி பந்தை துரத்தமுயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், கண்ணீர்மல்க வெளியேற பதிலி வீரராக நிக்கோலஸ் கோன்சலஸ் களமிறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 112-வது நிமிடத்தில் ஜியோவானி லோ செல்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற அர்ஜெண்டினா வீரர் லாட்டாரோ மார்டினெஸ், கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடித்து அசத்தினார்.

கோல் அடித்ததும் லாட்டாரோ மார்டினெஸ் ஓடிச் சென்றுலயோனல் மெஸ்ஸியை கட்டியணைத்தார். இதன் பின்னர் எஞ்சிய 8 நிமிடங்களில் மேற்கொண்டு கோல் அடிக்கப்படவில்லை. முடிவில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த அணி கோபா அமெரிக்கா தொடரில் கோப்பையை வெல்வது இது 16-வது முறையாகும். பெரிய அளவிலான தொடர்களில் அர்ஜெண்டினா தொடர்ச்சியாக 3-வது முறையாக மகுடம் சூடியுள்ளது. 2021-ம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடர், 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா தற்போது மீண்டும் கோபா அமெரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது.

x