இலங்கை அணியை பந்தாடியது நமீபியா: உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அபாரம்!


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை நமீபியா அபாரமாக வீழ்த்தியது

உலகோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. ஜீலாங் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியான நமீபியா பேட்ஸ்மேன்கள் களமிறங்கியது முதலே பொறுப்பாக விளையாடி, இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜன் பிரைலிங் 28 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தார். ஜேஜே ஸ்மித் 16 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அசத்தினார். ஸ்டீபன் பார்டு 26 ரன்கள் எடுத்தார். இதனால் நமீபியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் தரப்பில் ப்ரமோத் மதுசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

164 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, நமீபியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறியது. இதன் காரணமாக அந்த அணியின் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷனகா மட்டும் அதிகபட்சமாக 29 ரன்களைக் குவித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனால் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. நமீபியாவின் வீஸ், ஸ்கால்ட்ஸ், ஷிகாங்கோ, ப்ரைலிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

முன்னாள் உலக சாம்பியனான இலங்கை அணிக்கு சிறிய அணியான நமீபியா அணி தொடக்கப் போட்டியிலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக ஆடிய ஜன் ப்ரைலிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

x