டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேலம் அணியை வீழ்த்தியது திருச்சி


கோயம்பத்தூர்: டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

கோயம்பத்தூரிலுள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் இந்த லீக் ஆட்டம் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அர்ஜுன் மூர்த்தி 11 ரன்களும், வசீம் அகமது 19 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த ஷியாம்சுந்தர் 14 பந்துகளில் 19 ரன்களும், ஜாபர் ஜமால் 23 பந்துகளில் 32 ரன்களும் குவித்தனர்.

அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோர் உயர பெரிதும் உதவினார்.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம்அணி விளையாடியது. ஆனால் திருச்சி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி18.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றியைச் சுவைத்தது.

சேலம் அணியில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 31 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திருச்சி அணி தரப்பில் பி.சரவணகுமார் 3 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். அந்தோணிதாஸ், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அதிசயராஜ் டேவிட்சன், கண்ணன் விக்னேஷ் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். திருச்சி வீரர் சஞ்சய் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

x