ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் விளாசல்: டி20 தொடரை வென்றது இந்திய அணி


ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடியால் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-1 என தன்வசப்படுத்தியது.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சிகந்தர் ராஸா 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.

தொடக்க வீரர்களான வெஸ்லி மாதவரே 24 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களும் தடிவனஷே மருமணி 31 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்கள் வீழ்த்தினார். அறிமுக வீரரான துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 153 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷுப்மன் கில் 39 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார்.

10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-1 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

2-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 5-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

x