டார்ட்மன்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின்அரை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.
ஜெர்மனியின் டார்ட்மன்ட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி தனது முதல் கோலை அடித்தது. சேவி சைமன்ஸ் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து வலது காலால் வலுவாக அடித்த ஷாட், கோல் வலையின் இடதுபுறத்தை துளைத்தது. இதனால் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 13-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் உதவியுடன் பந்தை பெற்ற ஹாரி கேன் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி அடித்தார். அதை நெதர்லாந்து கோல் கீப்பர் பார்ட் வெர்ப்ரூகன் கோல் விழவிடாமல் தடுத்தார்.
18-வது நிமிடத்தில் ஹாரி கேன் பெனால்டி பகுதிக்குள் வைத்து பந்தை உதைக்க முயன்ற போது நெதர்லாந்து வீரர் டென்சல் டம்ஃபிரைஸ் இடைமறித்தார். அப்போது டென்சல் டம்ஃபிரைஸின் கால் வலுவாக ஹாரி கேன் மீது பட்டது. இதனால் இங்கிலாந்து அணி அப்பீல் செய்ய, பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஹாரி கேன் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. 39-வதுநிமிடத்தில் இங்கிலாந்தின் பில் போடன், பாக்ஸ் பகுதிக்கு வெளியேஇருந்து அடித்த பந்து கோல்கம்பத்தின் இடதுபுறம் தடுக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
65-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜோய் வீர்மன் கார்னரில் இருந்து அடித்த ஷாட்டை டென்சல்டம்ஃபிரைஸ் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிகோல் வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது. 77-வது நிமிடத்தில்நெதர்லாந்து வீரர் கோடி கக்போவின் கிராஸை பெற்ற வெகோர்ஸ்ட் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து தடுக்கப்பட்டது. அடித்த நொடியில் சேவி சைமன்ஸ் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டு தடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஆட்டம் டிராவில் முடிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு நொடி எஞ்சிய நிலையில் இங்கிலாந்து வீரர் கோலி பால்மர் உதவியுடன் பந்தைபெற்ற ஆலி வாட்கின்ஸ், பாக்ஸின் வலது புறத்தில் அடித்த ஷாட் கோல் வலையின் இடதுபுறத்தை துளைத்தது. இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக 80-வது நிமிடத்தில் பில் போடனுக்கு பதிலாக கோலிபால்மரையும், 81-வது நிமிடத்தில் ஹாரி கேனுக்கு ஆலி வாட்கின்ஸையும் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் உள்ளே கொண்டு வந்தார். அவரது துணிச்சலான முடிவுக்கு சிறந்த பலன் கிடைத்தது. ஏனெனில் இந்த கூட்டணி கடைசி நொடியில் கோல் அடித்ததன் காரணமாகவே வெற்றி வசப்பட்டிருந்தது.
யூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். கடந்த 2020-ம் ஆண்டுநடைபெற்ற தொடரிலும் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அப்போது இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட்டில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் வரும் 14-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு பெர்லின் நகரில் நடைபெறுகிறது.