தமிழ் சினிமாவில் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு வெற்றி பெற்ற நடிகர்களில் விக்ரம் தனிச் சிறப்பு மிக்கவர். கிரிக்கெட்டில் அப்படி ஒருவரைக் கைகாட்ட வேண்டுமென்றால், தினேஷ் கார்த்திக்தான் அதற்குச் சரியானவர். 2004-ம் ஆண்டில் தொடங்கி அணியில் போவதும் வருவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கொண்டது. 2022-ல் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்ததன் மூலம், கிரிக்கெட்டில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அது என்ன?
புத்தாயிரத்தின் தொடக்கத்தில் விக்கெட் கீப்பராக பார்த்திவ் பட்டேல் அணியில் இடம்பிடிக்கத் தொடங்கினார். ஓரிரு ஆண்டுகள்தான் சென்றிருக்கும். அடுத்ததாக, தினேஷ் கார்த்திக் 2004-ல் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடத் தொடங்கினார். அதன்பின் இருவரும் மாறிமாறி அணியில் இடம்பெற்றுவந்தார்கள். 2004-05-ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி அணியில் இடம்பிடித்த பிறகு இவை எல்லாமே மாறின. அதிரடி ஆட்டப் பாணியைக் கடைப்பிடித்தார் தோனி.
இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர்கள் யாரும் தோனி அளவுக்கு பேட்டிங்கில் அதிரடியாக விளையாடியதில்லை. அந்தப் பாணி அணியில் அவருக்கான இடத்தை நிரந்தரமாக்கியது. அதிரடி ஆட்டத் தன்மைக்குப் பொருந்தாத பார்த்திவ் பட்டேலும் தினேஷ் கார்த்திக்கும் ஓரங்கட்டப்பட்டார்கள். அதன்பின் இவர்கள் தோனிக்கு மாற்று வீரர்களானார்கள். தோனி ஓய்வுக்குப் பிறகு ரிஷப் பந்த், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா என விக்கெட் கீப்பர்கள் வரிசை கட்ட... தினேஷ் கார்த்திக்கால் நிரந்தரமாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனது.
ஆனால், 2022 தினேஷ் கார்த்திக்குக்கான ஆண்டாக மாறியது என்று நிச்சயம் சொல்லலாம். 2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிரடி வீரராகவும் ஃபினிஷராகவும் சிறந்து விளங்கியதால், தோனிக்குப் பிறகு சிறந்த ஃபினிஷராக இருப்பார் என்ற அடிப்படையில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து டி20 அணியில் இந்த ஆண்டு இடம்பிடித்து வருகிறார். இப்போது டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.
இதில் குறிப்பிடும்படியான விஷயம் ஒன்று இருக்கிறது. கடைசியாக 2010-ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்து சாதித்திருக்கிறார். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இத்தனை ஆண்டுகள் இடைவெளியில் உலகக் கோப்பைத் தொடரில் இடம்பிடித்தில்லை என்பதே நிதர்சனம். தினேஷ் கார்த்திக் மட்டுமே அந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
டி20 அணியில் மட்டுமல்ல 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இதேபோன்ற சாதனையைத் தினேஷ் கார்த்திக் செய்திருக்கிறார். முதன் முறையாக 2007-ல் மேற்கிந்தியத் தீவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார்.
அப்போதும் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகுதான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார். இப்போதும் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகுதான் தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
திறமையும் பொறுமையும் இருந்தால் காலம் எப்போதும் கைகொடுக்கும் என்பதற்கு தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையே சாட்சி!