‘இந்த சதத்தை மனைவி, மகளுக்கு சமர்ப்பிக்கிறேன்’ - ருத்ரதாண்டவத்துக்குப் பின் நெகிழ்ந்த கோலி!


ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 122 ரன்கள் குவித்து அசத்தினார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியைத் தழுவியதால் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை இந்தியா நேற்று எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே தெறிக்கவிட்டனர். 28 ரன்களில் கோலி கொடுத்த கேட்சை ஆப்கன் வீரர் இம்ராகிம் ஜட்ரான் தவறவிட்டார். இந்த கண்டத்தில் இருந்து மீண்ட கோலி அதன்பின்னர் ருத்ர தாண்டவம் ஆடினார். ராகுல் 62 ரன்னில் ஆட்டமிழந்த பின் சூர்யகுமாரும் 6 ரன்னில் சுருண்டார். ரிஷப் பண்ட் மறுமுனையில் இருக்க எல்லா பந்துகளையும் தெறிக்கவிட்ட கோலி 19 வது ஓவரில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும் . ஆட்டத்தின் முடிவில் 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகள் உட்பட 122 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார் கோலி. இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை குவித்தது.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் புவனேஷ்குமாரின் பந்துவீச்சில் ஒருவர் பின் ஒருவராக சுருண்டனர். அந்த அணியில் இப்ராகிம் ஜட்ரான் மட்டும் நிலைத்து ஆடி 64 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 111 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர் புவனேஷ்குமார் 4 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

விராட் கோலியின் ஆட்டம் நேற்று அனைவரையும் கவர்ந்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர் கோலியின் பழைய பார்ம் ஆட்டத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து பேசிய கோலி, “கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது அதிகம். அடுத்த மாதம் எனக்கு 34 வயதாகப்போகிறது. அதனால் ஆக்ரோஷமாக சதத்தை கொண்டாடுவது எல்லாம் முடிந்துபோய் விட்டது. இப்போது நான் இந்த இடத்தில் நிற்க காரணம் என் மனைவி அனுஷ்கா சர்மாதான். கடினமான காலகட்டத்தில் இருந்து மீள அவர்தான் எனக்கு பக்கபலமாக இருந்தார். மேலும் இந்த சதத்தை என் மகள் வாமிகாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்

x