அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா. இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பிரபலமானவர். சமீப காலமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சுரேஷ் ரெய்னா இன்று தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில், “ இந்திய அணி மற்றும் உத்தரபிரதேச அணியின் சார்பில் விளையாடியதற்காக பெருமைப்படுகிறேன். கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். இந்த தருணத்தில் பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் உள்ளிட்டவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
35 வயதான சுரேஷ் ரெய்னா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26.5 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 768 ரன்கள் எடுத்துள்ளார். 226 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 35.31 பேட்டிங் சராசரியுடன் 5,615 ரன்கள் குவித்துள்ளார், இதில் 5 சதங்கள், 36 அரை சதங்கள் அடங்கும். அதேபோல 78 டி20 போட்டிகளில் விளையாடி 29.2 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,605 ரன்கள் எடுத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பெரும்பாலும் விளையாடியுள்ளார். இடையில் 2016 மற்றும் 2017 ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவரை ஐபிஎல்-ல் 205 போட்டிகளில் விளையாடி 32.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவர் ஒரு சதம் மற்றும் 39 அரை சதங்களை அடித்துள்ளார்.