இந்திய அணிக்கு எதிரான முதல் டி20-ல் ஜிம்பாப்வே வெற்றி


ஹராரே: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் ரியான் பராக், அபிஷேக் சர்மா, துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 29, டியோன் மையர்ஸ் 23, பிரையன் பென்னட் 22, வெஸ்லி மாதவரே 21, கேப்டன் சிகந்தர் ராஸா 17 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும் முகேஷ் குமார்,அவேஷ்கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

116 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி, ஜிம்பாப்வே வீரர்களின் அபார பந்துவீச்சால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 31 ரன்களும், அவேஷ் கான் 16 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

அபிஷேக் சர்மா 0, ருதுராஜ் கெய்க்வாட் 7, ரியான் பராக் 2, ரிங்கு சிங் 0, துருவ் ஜூரெல் 6, முகேஷ் குமார் 0, ரவி பிஷ்னோய் 9 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர்.

முன்னிலை வீரர்கள் அனைவரும் ஆட்டமிழக்க இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் பின்னர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து ஆடி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றார்.

வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் 5-வது பந்தில் கடைசி ஆளாக வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். இதையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி கண்டு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ராஸா, டெண்டாய் சதாரா ஆகியோர் தலா 3, பிரையன் பென்னட், வெலிங்டன் மஸகட்ஸா, பிளெஸ்ஸிங் முஸர்பானி, லூக் ஜாங்வே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

x