டி20 உலகக் கோப்பையுடம் தாயகம் திரும்பிய இந்திய அணி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு


புதுடெல்லி: டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி கோப்பையுடன் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தாயகம் திரும்பியது. இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல் வரை அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். பின்னர் மதியம் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, மும்பை நரிமண் பாயின்ட்டில் இருந்து வான்கடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட வெற்றிப் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு ரசிகர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா சமூக வலைதளம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

புயலில் சிக்கிய இந்திய அணி: கடந்த சனிக்கிழமை டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. புயலால் பார்படாஸ் விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பார்படாஸ் விமான நிலையம் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த தனிவிமானம் (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் இருந்து பார்படாஸில் உள்ள கிராண்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது.

இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணி அளவில் இந்திய அணியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் பார்படாஸில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர். சுமார் 16 மணி பயணத்துக்கு பின்னர் அவர்கள், வியாழக்கிழமை காலை டெல்லி வந்தடைந்தனர்.

11 ஆண்டுகளுக்குப் பின் வசமான கோப்பை: முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

டி20 உலகக் கோப்பையின் அறிமுக தொடரான 2007-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அதன் பின்னர் ஒரு முறை கூட மகுடம் சூடவில்லை. அதேவேளையில் ஐசிசி தொடர்களில் கடைசியாக இந்திய அணி 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று ஏமாற்றம் அடைந்தது.

இம்முறை இந்திய அணி தடைகளை கடந்து டி20 உலகக் கோப்பை வெற்றி மூலம் 11 வருட கோப்பை தாகத்தை தீர்த்தது ரோகித் தலைமையிலான இந்திய அணி.

x