டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து


சென்னை: டி20 உலகப் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: முழுமையான ஆதிக்கத்துடன் இந்தியஅணி வீரர்கள் 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையைவென்றுள்ளதைக் கொண்டாடுவதில் உற்சாகமடைகிறேன். சவாலான சூழல்களிலும் இணையற்றஅறிவுக்கூர்மையை வெளிப்படுத்திய இந்திய அணி, தோல்வியே காணாமல் உலகக் கோப்பைத் தொடரை நிறைவு செய்துள்ளது. இந்திய அணிக்கு எனது பாராட்டுகள்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, விராட் கோலியின் ஆட்டம், பும்ராவின் பந்துவீச்சு ஆகியவை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் காலங்காலமாக நிலைத்திருக்கும். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வெற்றி வாகைசூடியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் முரண்பாடுகள் இருந்தபோதும், இந்திய ​​​​அணி கைவிடவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசாதாரணமான கேட்சுடன் வெற்றியை உறுதிசெய்தது. போட்டி முழுவதும் சாம்பியனாக விளையாடிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். கடின பயிற்சி மற்றும் விடா முயற்சியால் இறுதி வரை போராடி சரித்திரமிக்க சாதனையை படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடரட்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்தியாவுக்கு பெருமைசேர்த்த கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டுகள். அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தியாவுக்கு வெற்றியையும், பெருமையையும் தேடித்தந்துள்ளனர்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: பாதை கடினமாக இருந்தபோதும், ​​​​இந்த இந்திய அணி தாங்களால் வெல்ல முடியும் என்பதை காட்டியுள்ளது. விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார், ரோஹித் ஷர்மா ஆகியோரின் பங்களிப்பு மற்றும் இந்த வரலாற்று வெற்றிக்கு நம்மைவழிநடத்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்: அதிர்ஷ்டம் இப்படியும் அப்படியுமாக சுழன்றாலும் இறுதியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வென்றது. டி20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய பதினொரு வீரர்களும் ஹீரோக்கள் தான். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்