கண்களை கட்டிக்கொண்டு 5 கி.மீ. தூரம் ஸ்கேட்டிங்: 9 வயது சிறுவன் சாதனை @ தென்காசி 


தென்காசி: தென்காசியைச் சேர்ந்த ஸ்ரீமுகுந்தன் என்ற 9 வயது சிறுவன் கண்களை கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தார்.

தென்காசியைச் சேர்ந்த ரெங்கநாதன், காயத்ரி தம்பதியின் மகன் ஸ்ரீ முகுந்தன் (9). இவர் ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் கண்களை கட்டிக்கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் முயற்சியில் ஈடுபட்டார்.

தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் மற்றும் அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சிறுவனின் சாதனை முயற்சியை நிகழ்ச்சியை இன்று நடத்தின. குத்துக்கல்வலசை - பண்பொழி ரோடு பகுதியில் சிறுவன் ஸ்ரீமுகுந்தன் கண்களை கட்டிக்கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து, யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தார்.

இந்தச் சாதனை முயற்சியை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தொடங்கி வைத்தார். அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் அரிகரன், அருள்மிகுசெந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் புதிய பாஸ்கர், தாளாளர் கல்யாணி, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், யோகா, ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள், பொதுமக்கள் சிறுவனை உற்சாகப்படுத்தி பாராட்டினர்.