அரை இறுதியில் கால்பதித்தது தென் ஆப்பிரிக்கா: மேற்கு இந்தியத் தீவுகள் வெளியேறியத


ஆன்டிகுவா: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி.

ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட்கள் இழப்புக்கு 135 ரன்கள் என்ற நிலையில் கட்டுப்படுத்தினர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள். அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், கைல் மேயர்ஸ் 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்களும் சேர்த்தனர். ஆந்த்ரே ரஸ்ஸல் 15, அல்சாரி ஜோசப் 11 ரன்கள் சேர்த்தனர்.

முதல் ஓவரிலேயே மார்கோ யான்சன் பந்தில் ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 2-வது ஓவரில் அபாயகரமான பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னில் எய்டன் மார்க்ரம் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்த ஆடுகளத்தில் கைல் மேயர்ஸ், ராஸ்டன் சேஸ் ஜோடி சீராக ரன்கள் சேர்த்தது. 12 ஓவர்களில் 86 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் கைல் மேயர்ஸை, தப்ரைஸ் ஷம்சி வெளியேற்றினார்.

இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பொவல் ஒரு ரன்னில் கேசவ் மகாராஜ் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு (0), தப்ரைஸ் ஷம்சி பந்தில் நடையை கட்டினார். அடுத்த சில ஓவர்களில் நிதானமாக விளையாடி வந்த ராஸ்டன் சேஸையும் பெவிலியனுக்கு அனுப்பினார் தப்ரைஸ் ஷம்சி. இறுதிக்கட்ட ஓவர்களில் ஆந்த்ரே ரஸ்ஸலின் அதிரடியால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன்களையாவது எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரஸ்ஸல் 15 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து அகீல் ஹோசைன் 6 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்களை வீழ்த்தினார். மார்கோ யான்சன், எய்டன் மார்க்ரம், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். எய்டன் மார்க்ரம், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் கூட்டாக 12 ஓவர்களை வீசி 79 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை 18-வது ஓவரில் தான் பந்து வீச அழைத்தார். 2 ஓவர்களை மட்டுமே வீசிய அவர், 11 ரன்களை மட்டுமே வழங்கினார். இதுவும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது.

136 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்திருந்தது போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 0, குயிண்டன் டி காக் 12 ரன்களில் ஆந்த்ரே ரஸ்ஸல் பந்தில் ஆட்டமிழந்தனர்.

மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மழை காரணமாக ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு கைகொடுத்தது. பந்துகள் நன்றாக மட்டைக்கு வந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் சீராக ரன்கள் சேர்த்தனர்.

எய்டன் மார்க்ரம் 18, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மட்டையை சுழற்றிய ஹெய்ன்ரிச் கிளாசன் 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் விளாசிய நிலையில் அல்சாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் மில்லர் 4 ரன்னில் வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ராஸ்டன் சேஸ் வீசிய 16-வது ஓவரின் 2-வது பந்தில் , கேசவ் மகாராஜ் (2) ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ரபாடா கடைசி பந்தில் அற்புதமான கவர் டிரைவ் ஷாட்டால் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டதால் தென் ஆப்பிரிக்க அணியின் அழுத்தம் குறைந்தது.

ஓபெட் மெக்காய் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை மார்கோ யான்சன் சிக்ஸருக்கு விளாச தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூப்பர் 8 சுற்றில் அந்த அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. மார்கோ யான்சன் 14 பந்துகளில், 21 ரன்களும் ரபாடா 5 ரன்களும் சேர்த்தனர். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றின் குரூப் 1-ல் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதே பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. போட்டியை இணைந்து நடத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்களில் 2 தோல்விகளை சந்தித்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

‘சோக்கர்ஸ் முத்திரை தகர்ப்பு’: ஐசிசி தொடர்களில் வழக்கமாக தென் ஆப்பிரிக்க அணி முக்கியமான கட்டங்களில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது இல்லை. 1992-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மழை விதியால் ஒரு பந்தில் 22 ரன் அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதில் இருந்து பல்வேறு முறை தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி தொடர்களில் சோகத்துடனும், வேதனையுடனும் வெளியேறி உள்ளது. இதனாலேயே அந்த அணி மீது ‘சோக்கர்ஸ்’ என்ற முத்திரை விழுந்தது. இவற்றுக்கெல்லாம் தற்போதைய டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க முடிவு கட்டி வெற்றிகரமாக அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது.

சாதனை வெற்றி: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது. அந்த அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7 வெற்றிகளை (லீக் சுற்று 4 வெற்றி, சூப்பர் 8 சுற்று 3 வெற்றி) குவித்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக இலங்கை 2009-ம் ஆண்டு 6 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. ஆஸ்திரேலியா அணி 2010 மற்றும் 2021-ம் ஆண்டு தொடர்களில் தலா 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது.