இனியெல்லாம் ஜெயமா இந்திய அணிக்கு?


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு 2022-ம் ஆண்டு மிக மோசமாகத் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட், 50 ஓவர் என இரண்டு போட்டித் தொடர்களிலும் அந்நாட்டு அணியிடம் படுதோல்வி அடைந்து தாயகம் திரும்பியது இந்திய அணி. ஆனால், அதைத் தொடர்ந்து இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய இரண்டு அணிகளுக்கெதிராக அடுத்தடுத்து நடைபெற்ற தொடர்களில் டெஸ்ட், 50 ஓவர், 20 ஓவர் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மே.இ.தீவுகளுடனான தலா மூன்று போட்டிகள் கொண்ட 50 ஓவர், 20 ஒவர் தொடர்கள், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணிக்கு அபார வெற்றி கிடைத்திருக்கிறது!

ஆகமொத்தம் மூன்று வடிவங்களிலும் சேர்த்து நான்கு தொடர்களில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகள், அணியின் அண்மைக்காலத் தோல்விகள் ஏற்படுத்திய காயங்களுக்கான மருந்தாக அமைந்தன. கூடவே, வெற்றிகள் ஈட்டப்பட்ட விதமும் அணியில் இளைஞர்களின் பங்களிப்பும் ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை வலுப்பெறச் செய்துள்ளன.

புறந்தள்ள முடியாத விமர்சனங்கள்

ஒரு காலத்தில் எதிரணியினரை மிரளவைத்த மே.இ.தீவுகள்,1996 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சீரான வெற்றிகளைக் குவித்து வந்த இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வலுவற்ற அணிகளாகக் கருதப்படுகின்றன. ஆக, இந்த இரண்டு அணிகளுடனான தொடர்களிலுமே இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது. அணித் தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலக நேர்ந்த பிறகு புதிய அணித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ரோகித் சர்மாவின் தலைமைக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்கவே இந்த இரு தொடர்களும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்பட்டதாகவும் கிரிக்கெட் நோக்கர்களால் முணுமுணுக்கப்பட்டது. கோலி தன்னுடைய தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்கிய விதம், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை தொடங்கி இந்திய அணியின் மோசமான தோல்விகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது மேற்கூறிய விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. அதே நேரம், தற்போதைய அணியின் அணுகுமுறையும், வீரர்களின் செயல்பாடும் அணியின் எதிர்காலத்தில் செலுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பத்தாண்டு சாதனை

இந்திய அணி 2012-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 எனும் கணக்கில் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக தாய்மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரைக்கூட இந்தியா இழக்கவில்லை. 13 தொடர்களில் வென்றுள்ளது. 40 போட்டிகளை விளையாடி அவற்றில் 33 வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் மட்டுமே பெற்றுள்ளது. எந்த ஒரு அணிக்குமே தாய்மண்ணும் ஆடிப் பழகிய ஆடுகளங்களும் களச்சூழலும் மிகப் பெரிய அனுகூலம் என்ற பொதுவிதியை கணக்கில் எடுத்துக்கொண்டாலும்கூட தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு ஒரு தொடரைக்கூட இழக்காமல் இருப்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெகு சில அணிகளே இத்தகைய நீண்டகால சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன.

இளம் மட்டையாளர்களின் எழுச்சி

அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளிலும், வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளிலும் இந்தியாவின் இளம் மட்டையாளர்களின் பங்களிப்பு அவர்கள் மீது கடந்த சில மாதங்களாக உருவாக்கியிருந்த அவநம்பிக்கையைத் தணிக்கும் வகையில் அமைந்திருந்தன. டெஸ்ட் போட்டிகளில் அனுபவஸ்தர்களான சிதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே இருவருக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை. தொடக்க மட்டையாளர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலக வேண்டியிருந்தது. அணித் தலைவர் ரோகித்தும் மொஹாலியில் இலங்கைக்கு எதிராகத் தனது நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடிய கோலி இருவரும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. ஆனால், முதல் டெஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார். ஏழாவதாகக் களமிறங்கிய இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து பவுண்டரிகளை விளாசி 96 ரன்களைக் குவித்தார்.

மூன்றாவது வீரராகக் களமிறங்கிய ஹனுமா விஹாரியும் அரை சதம் அடித்தார். இரண்டு போட்டிகளிலும் நிதானமாக விளையாடினார். ஷ்ரேயஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறையே 92, 67 ரன்களை குவித்து வெற்றிக்குப் பங்களித்தார். பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு அரை சதம் அடித்தார். இப்படி உலகத் தரம் வாய்ந்த மட்டையாளர்களின் துணை இல்லாமல் இரண்டாம் நிலை மட்டையாளர்கள், ஆல்ரவுண்டர்கள், டெய்ல் எண்டர்கள் அனைவரும் சிறப்பான மட்டைவீச்சின் மூலம் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர்.

மே.இ.தீவுகள், இலங்கை ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிரான 50 ஓவர், 20 ஓவர் போட்டித் தொடர்களிலும் இளம் மட்டையாளர்கள் வெகு சிறப்பாகப் பங்களித்தனர். குறிப்பாக, ஷ்ரேயஸ் இலங்கைக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளிலும் தலா 57, 74, 73 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு முதன்மைப் பங்களித்தார். ரிஷப் பந்த், இஷாந்த் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய பிற இளம் மட்டையாளர்களும் ஒரு போட்டியிலாவது அரை சதம் அல்லது அதற்கு மேல் அடித்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தனர்.

பக்கபலமான பந்துவீச்சு

இரண்டு போட்டிகளிலுமே மட்டையாளர்கள் தமது வேலையை வெகு சிறப்பாகச் செய்துவிட்டதால் பந்துவீச்சாளர்கள் அவர்களுக்குத் துணைபுரிந்தாலே போதும் என்ற நிலை இருந்தது. அந்த துணைக் கதாபாத்திரத்தை நம் பந்துவீச்சாளர்கள் சரியாகவே செய்தனர். அதையும் தாண்டி இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். குறிப்பாக, முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரே போட்டியில் 150-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்னும் புகழை அடைந்தார் ரவீந்திர ஜடேஜா.

50 ஓவர், 20 ஓவர் போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், தீபக் சாஹர், அவேஷ் கான் உள்ளிட்ட இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் பிரகாசித்தனர். பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஷார்துல் தாகுர் உள்ளிட்ட அனுபவஸ்தர்களும் ஒரு சில விக்கெட்களை வீழ்த்தியதோடு எதிரணி மட்டையாளர்களின் ரன் குவிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றினர்.

மொத்தத்தில் ஒப்பீட்டளவில் எளிய அணிகளுக்கு எதிரான தொடர்கள் என்றாலும் அவற்றில் பெறப்பட்ட வெற்றியின் அளவும் இளம் வீரர்கள் பங்களிப்பால் இந்த வெற்றிகள் கிடைத்திருப்பதும் இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்கள் குறித்த நம்பிக்கைக்கு வலுவூட்டியிருக்கின்றன. இந்த வெற்றிகளின் மூலம் உலக டெஸ்ட் போட்டி சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கான புள்ளிகள் அதிகரித்துள்ளன. கடந்த முறை நியூசிலாந்திடம் இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய அணி, ரோகித்தின் புதிய தலைமையுடன் இளம் வீரர்களின் எழுச்சியில் தன்னம்பிக்கை பெற்றிருக்கிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் 2023-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையையும் இந்திய அணி வெல்வதற்கான தொடக்கமாக இந்த வெற்றிகள் அமையட்டும்!

x