ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், யாஸ்திகா பாட்டியா அரைசதம் விளாசினர். இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்துள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடந்து வரும் 18-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மந்தனா 10 ரன்னிலும், ஷபாலி சர்மா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து, யாஸ்திகா பாட்டியா களமிறங்கினார். இவர் கேப்டன் மிதாலி ராஜியுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 158 ஆக இருந்தபோது யாஸ்திகா ஆட்டம் இழந்தார். இவர் 6 பவுண்டரியுடன் 59 ரன்கள் விளாசினார். அடுத்து கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களில் வெளியேறினார். இவர் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தற்போது ஹார்மன்ப்ரீத்- ரிச்சா ஜோடி விளையாடி வருகிறது. இந்திய அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.
இதுவரை விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. பட்டியலில் 4-வது இடத்தில் இந்திய அணி இருக்கிறது.