200 மீட்டரில் முதலிடம்: பதக்கத்தை நோக்கி தனலட்சுமி


தனலட்சுமி

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தடகள வீராங்கனைகளில் ஒருவரான திருச்சி தனலட்சுமி தான் கலந்துகொண்ட பயிற்சி ஓட்டத்தில் முதலிடம் பிடித்ததன் மூலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள பெடரேஷன் கோப்பை விளையாட்டுப் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்லும் நம்பிக்கையை அளித்திருக்கிறார்.

திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி சேகர் (23). சிறிய வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பில் வளர்ந்தவர். சிறுவயது முதலே விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பள்ளிப் பருவத்திலிருந்தே பதக்கங்களை வெல்ல ஆரம்பித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பை விளையாட்டுப் போட்டியில் 23.21 விநாடிகளில் இருநூறு மீட்டரைக் கடந்து பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தார். அந்த கணத்திலிருந்துதான் தனலட்சுமியின் மீது இந்திய அளவில் பார்வை விழுந்தது. அதனைத்தொடர்ந்து இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் ஓட்டத்தில் களமிறக்கப்பட்டார். அடுத்தமுறை பதக்கம் வெல்லவேண்டும் என்று உறுதியில் இருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான பெடரேஷன் கோப்பை தடகள விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சிக்காக தனலட்சுமியும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே கேரளத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. தேசிய அளவிலான இந்த போட்டிகளில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட தனலட்சுமி முதலிடம் பிடித்தார். தேசிய அளவில் சிறப்பு வாய்ந்த வீராங்கனைகளான ஹீமா தாஸ், டூட்டி சந்த் உள்ளிட்டவர்களை விட குறைவான நேரத்தில் ஓடியிருப்பதன் மூலம் இந்த ஆண்டும் தனலட்சுமிக்கு பெடரேஷன் கோப்பையில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

x